வியாழன், 7 ஜூலை, 2011

தயாநிதி மாறனிடம் விசாரணை

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறனுக்கு அடுத்தடுத்து பல்வேறு சோதனைகள் காத்துள்ளன. விரைவில் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.



ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டியது. ஏர்செல் நிறுவனத்திற்குசாதகமாக 2ஜி உரிமங்களை வழங்கியது உள்ளிட்டவை தொடர்பாக கிடுக்கிப் பிடி விசாரணை நடத்த சிபிஐ தயாராகி வருகிறது.



சிவசங்கரன் இதுதொடர்பாக கொடுத்துள்ள புகார்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையை மாற்றியது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தயாநிதி விசாரிக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட தொலைத் தொடர்புக் கொள்கைகள் குறித்து ஏற்கனவே ஒரு விசாரணை ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அருண் ஷோரியை நேரில் அழைத்து சிபிஐ விசாரித்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது ஆட்சிக்காலத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதை சிபிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் சிக்கியுள்ளார்.



தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்துவதைத் தவிர சன் டிவியின் நிதி வருவாய், நிதி நிர்வாகம் குறித்தும் சிபிஐ விரிவாக விசாரிக்கவுள்ளது. மேலும், மேக்ஸிஸ் நிறுவனம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கிய விதம் குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes